திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசு பல்வேறு நிலைகளில் விரைந்து செயலாற்றி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 9, 730 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 135 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மட்டுமே தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
தடுப்பு நடவடிக்கை
மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், அதிக தொற்றுள்ள பகுதிகளில் நிலையான காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்துதல், வீடு வீடாக பரிசோதனை செய்தல், நிலையான மற்றும் நடமாடும் முகாம்கள் அமைத்தல், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுதல், மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா உள்பட பலர் இருந்தனர்.