பிரபல தாதா மர்டர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் வசூலித்தோம் - கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
பிரபல தாதா மர்டர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி புதுவை தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் வசூல் செய்ததாக அவனது கூட்டாளிகள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி ரோடியர்பேட்டையை சேர்ந்த ரவுடி சாணிக்குமார் கடந்த ஆண்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்களை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகளான அந்தோணி, மணிவண்ணன் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அந்தோணி, மணிவண்ணன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், சிறையில் இருந்து வரும் மர்டர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி கோரிமேடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ.15 லட்சம் வாங்கினோம். அந்த பணத்தை மர்டர் மணிகண்டனின் உறவினரான உப்பளம் அர்ஜூனனிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அர்ஜூனனை போலீசார் விசாரணைக்காக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் அர்ஜூனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு திரண்டனர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்து அர்ஜூனனை விடுவிக்க வேண்டும் எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு அழைத்து வந்தவரை விடுவிக்க கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட சம்பவம் முதலியார்பேட்டையில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.