விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் நோட்டீஸ் - மும்பை போலீஸ் அனுப்பியது

விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது முறையாக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Update: 2020-11-03 22:45 GMT
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை கூறியதாக சினிமா காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

மனுவை விசாரித்த கோர்ட்டு கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாந்திரா போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு கடந்த மாதம் 21-ந் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதில், இமாச்சல பிரதேசத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருப்பதால் விசாரணைக்கு வர இயலாது என நடிகை கங்கனா தனது வக்கீல் மூலம் போலீசாருக்கு பதில் அளித்து இருந்தார்.

இதையடுத்து வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு மீண்டும் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது பாந்திரா போலீசார் 2 சமூகத்தினர் இடையே மோதலை தூண்டியது, மத உணர்வுகளை வேண்டும் என்றே புண்படுத்தியது, பொது உள்நோக்கம், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்