வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி - மின்கம்பியில் கை உரசியதால் பரிதாபம்
வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்றபோது, மின்வயரில் கை உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், பாரதி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர், ஆன்லைனில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராஜேஷ், சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது கைகளை வீசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தபோது வீட்டின் மாடியை ஓட்டிச்சென்ற உயர் மின்அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை உரசியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து ராஜேசை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜேஷ் ஏற்கனவே மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.