கோவில்பட்டி அருகே, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் - மலையடிவாரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கடும் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே மலையடிவாரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-03 21:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம் ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். தோணுகால் அருகே 200 ஏக்கர் பரப்பளவில் மலை உள்ளது. இதில் அரியவகை மூலிகை செடிகள், மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இந்த மலையடிவார பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து தோணுகால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள கிராம மக்கள் மலையடிவார பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்த நிலையில், தோணுகால் மலையடிவார பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 320 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இடத்தை அளந்து வழங்குவதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு முறை வந்தபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச்சென்றனர். இந்நிலையில், நேற்று தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் தோணுகால் மலையடிவார பகுதியில் உள்ள மரங்கள், செடிகளை அகற்றி இடத்தை இலவச பட்டா வழங்குவதற்கு அளவீடு செய்ய பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்புக்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஆர்தர் தலைமையிலான போலீசாரும் வந்திருந்தனர்.

தகவல் அறிந்து, தோணுகால் ஊராட்சி தலைவர் வெங்கடலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரேவதி ஜெயக்கண்ணன் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை நிறுத்த வேண்டும். மலையடிவாரத்தில் இலவச பட்டா வழங்க கூடாது. வேறுபகுதியில் இலவச பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் உறுதிபடக் கூறினர். இதையடுத்து இப்பிரச்சினைக்கு கலெக்டர் மூலம் தீர்வு காணப்படும் என்றும், தற்போது எந்த பணியும் நடக்காது எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். பொக்லைன் எந்திரமும் அந்த பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்