தூத்துக்குடியில் பரபரப்பு: ரூ.15 லட்சம் மதிப்புடைய யானை தந்தங்கள் சிக்கின - மோட்டார் சைக்கிளில் கடத்திய 2 பேர் கைது
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புடைய யானை தந்தங்கள் சிக்கின. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட யானை தந்தத்தை கடத்தி வந்து சிலர் விற்பனை செய்ய இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் ஏட்டு சரவண ரமேஷ், போலீஸ்காரர் பிரதீப் ஆகியோர் தூத்துக்குடி கணேஷ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கணேசபுரத்தை சேர்ந்த ராஜவேல் (வயது 33), முனியசாமி (43) என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெட்ரோல் டேங்க் கவரில் ஒரு பாலித்தீன் பையில் 4 யானை தந்தங்கள் சுற்றி வைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது. அந்த யானை தந்தங்களை விற்பனைக்காக அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் ராஜவேல், முனியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தார்கள்.
மேலும், அவர்கள் யாரிடம் இருந்து யானை தந்தத்தை வாங்கி வந்தார்கள்? வேறு ஏதேனும் கும்பலுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.