ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்: பா.ஜனதா நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை - ஆடு மேய்த்த தகராறில் வாலிபர் வெறிச்செயல்; மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே பா.ஜனதா நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-03 23:00 GMT
தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ஏ.ஆர்.தாஸ்(வயது55). விவசாயியான இவர் பா.ஜனதா மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தாஸ் தென்திருப்பேரை பஜாரில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தென்திருப்பேரையை சேர்ந்த மாரி மகன் இசக்கி (21) தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாசை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் இசக்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதை அறிந்த தாஸ் தரப்பினர் அந்த பகுதியில் நின்ற இசக்கியின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தனர். மேலும் இசக்கின் வீடு மீதும் கல்வீசி தாக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், இசக்கியின் தந்தை மாரி ஆட்டு பண்ணை வைத்து பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆடு தாசுக்கு சொந்தமான தோட்டத்துக்குள் சென்று பயிரை மேய்ந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் மாரியை தாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி, தாசை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்