மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்

மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2020-11-03 05:31 GMT
மதுரை, 

சீர்மரபினர் நலசங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் ஒன்று கூடி, மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டையை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்தாண்டு தமிழக மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள 85 சதவீத மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தமிழக ஒதுக்கீட்டில் முறையாக இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். மொத்த இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு, அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 19 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும் வழங்க வேண்டும்.

நடவடிக்கை

இந்த தமிழக இடஒதுக்கீட்டு சட்டம் 1993-ம் ஆண்டு பிரிவு 4-ல் வேறு எந்த உத்தரவும் தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை கட்டுப்படுத்தாது என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. எனவே இடஒதுக்கீடு இல்லாமல் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டவிரோதமானது. மேலும் இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.

இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்ற வழக்கில் சட்டக்கூறுகள் சரியாக முன்வைக்கப்படவில்லை. எந்த நீதிமன்றமும் எப்போதும் தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை மீற உத்தரவு பிறப்பிக்கவில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சட்டம் வழங்கிய உரிமையை பாதுகாக்க தவறி விட்டதால் இனி நாங்கள் வாக்களிப்பதில் அர்த்தமில்லை. எனவே நாங்கள் எங்களது வாக்காளர் அட்டையை ஒப்படைக்கின்றோம். எனவே இந்தாண்டு தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் தமிழக சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாங்கள் வாக்களிக்க போவதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்