வைப்பாற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றக் கோரி கலெக்டருக்கு மனு

வைப்பாற்று பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2020-11-03 05:27 GMT
தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி கலெக்டருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வெம்பக்கோட்டை வைப்பாறு நீர்ப்பிடிப்பு பகுதி 1,361 ஏக்கர் பரப்புடையதாகும். வெம்பக்கோட்டை அணை நிரம்பும் சமயத்தில் திறக்கப்படும் தண்ணீர் இருக்கன்குடி அணைக்கு செல்கிறது. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இரு கரைகளிலும், ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து காடு போன்று காட்சியளிக்கிறது. இதனால் வைப்பாற்று பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

கோட்டைப்பட்டியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை அமைக்கப்பட்டது. தடுப்பணை அருகே அதிக அளவில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால் மழை நீர் தேங்குவது இல்லை. கருவேல மரங்களின் வேர் பகுதி ஊடுருவல் காரணமாக தடுப்பணை சேதம் அடைந்து வருகிறது.

அப்புறப்படுத்த வேண்டும்

இதே போன்று சேதுராமலிங்கபுரம், இரவார்பட்டி பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வைப்பாற்று பகுதியில் குழி தோண்டி தண்ணீரை சேகரித்து குடிநீராக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் ஆற்றில் மணல் பரப்பு ரோடாக மாறி உள்ளது.

இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய தண்ணீர் வருவதில்லை. எனவே வைப்பாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்