சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் வங்கி கணக்குகள் ஆய்வு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை
சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் துணைத்தலைவராக ஆனந்த் (வயது 45) என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சேலம் அழகாபுரம் கைலாஷ்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் ஆனந்த், மண்டலத்தில் பணியாற்றும் சில அலுவலர்களை வீட்டுக்கு வரவழைப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் அங்கு திடீரென சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரம், ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 34 தங்க காசுகள், வங்கி கணக்கு விவரங்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு தகவல்கள்
இதையடுத்து ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,
ஆனந்துக்கு சொந்தமாக சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 3 வீடுகள் உள்ளன. மேலும் வங்கி கணக்குகளில் பணம் ஏதேனும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகிறோம். இருந்தாலும் அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னர் தான் அவர் எங்கெங்கு, என்ன வாங்கினார்? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும், என்றனர்.
சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.