திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழாவையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு கிருத்திகை விழா தினமான நேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக காலை முதல் பக்தர்கள் பெருமளவில் முருகன் கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு முதலில் மூலவருக்கு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பிறகு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சாமி தரிசனம்
மேலும் காவடி மண்டபத்தில் உள்ள உற்சவரான வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை தினத்தையொட்டி, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.