மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2020-11-02 06:04 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் தர்மன் (வயது 25). இவர் பெரமண்டூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தீவனூருக்கு சென்று கொண்டிருந்தார். கோபாலபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கூட்டேரிப்பட்டில் இருந்து தீவனூர் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தர்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று தீவனூர் அருகே மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தலைமை காவலர்

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலம் போலீசார், டிரைவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய காரில், போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் காரை ஓட்டி வந்தவர் குமரவேல் என்பதும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதற்கிடையே விபத்தில் இறந்த தர்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்