நெல்லை-கங்கைகொண்டான் இரட்டை ரெயில் பாதை: தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் பொருத்தும் பணி மும்முரம்
நெல்லை-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,
சென்னை-கன்னியாகுமரி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கும் வகையில், இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இடையே ஒரு பகுதியாகவும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை மற்றொரு பகுதியாகவும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதில் கங்கைகொண்டானில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடி தட்டப்பாறை வரையிலும், தூத்துக்குடி மார்க்கத்தில் சில கிலோ மீட்டர் தூரமும் இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டது. கங்கைகொண்டான் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிலையம் போன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய இரட்டை ரெயில் பாதையில் பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து, ரெயில் இயக்கவும் அனுமதி அளித்தார்.
கான்கிரீட் சிலிப்பர்கள் அமைப்பு
இந்த நிலையில் அடுத்தகட்டமாக 85 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் திருமங்கலம்-துலுக்கப்பட்டி பிரிவில் 41 கிலோ மீட்டர் தூரமும், கடம்பூர்-கோவில்பட்டி பிரிவில் 23 கி.மீ. தூரமும், தட்டப்பாறை-தூத்துக்குடி மீளவிட்டான் இடையே 7 கி.மீ. தூரமும் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. மேலும் கங்கைகொண்டானில் இருந்து நெல்லை வரை 14 கி.மீ. தூரம் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பாதையில் ஏற்கனவே மண் சமப்படுத்தும் வேலைகள் முடிந்து விட்டன. பெரிய பாலம் கட்டுமான பணிகளும், சிறிய பாலம் கட்டுமான பணிகளும் நிறைவு பெற்றன.
இந்த நிலையில் மண் சமப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. அங்கு தண்டவாளத்துக்கு கீழே ஜல்லிக்கற்களில் நிறுவப்படும் கான்கிரீட் சிலிப்பர்கள் அந்தந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தில் சிலிப்பர்களை பொருத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த சில நாட்களாக இரட்டை ரெயில் பாதையில் கான்கிரீட் சிலிப்பர்களை பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பணிகள் மும்முரம்
நெல்லை தாழையூத்து ரெயில் நிலையத்தில் இருந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வரும் பாதையில் ரெயில்வே கிராசிங் வசதிக்காக கரையிருப்பு பகுதியில் இருந்து தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் வரை ஏற்கனவே 2 தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது அதன் அருகில் 3-வது தண்டவாளம் அமைக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் சிலிப்பர்களை பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிலிப்பர்களை பொருத்தும் பணி முடிந்தவுடன் அதன் மேலே தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு, நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் சரிபார்க்கப்படுகிறது. மேலும் இந்த பணி முடிந்தவுடன் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து தண்டவாளங்களுக்கும் ரெயில் கடந்து செல்லும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்படும். இத்துடன் கங்கைகொண்டான்-நெல்லை இடையிலான இரட்டை ரெயில் பாதை பணியும், மதுரை கோட்டத்துக்கான இரட்டை ரெயில் பாதை பணியும் முடிவடைகிறது. இந்த பணிகளை வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றும் வகையில், பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலப்பாளையம்
ரெயில் நிலையம்
இதேபோல் நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 2-வது ரெயில்வே பாலம் அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் அந்த பாலத்தின் மீது தண்டவாளங்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் அதை அடுத்துள்ள மேலப்பாளையம் ரெயில் நிலையத்திலும் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்க மண் சமப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஓடையின் குறுக்கே கூடுதலாக ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளனர். இதேபோல் மேலப்பாளையத்தில் இருந்து நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி வழியாக நாகர்கோவில் வரையிலும் இரட்டை ரெயில் பாதை அமைக்க தேவையான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.