தங்கள் கிராமத்தை தேடி வந்த பறவைகளுக்காக ஆண்டுதோறும் பட்டாசு சத்தமில்லாமல் தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள்
தங்கள் கிராமத்திற்கு இனப்பெருக்கம் செய்வதற்காக தேடி வந்த பறவைகளை பேணி காக்கும் வகையில் திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்,
பட்டாசு இல்லாத தீபாவளி பண்டிகையா என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்படுவது உண்டு. ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து ஆர்ப்பாட்டமாக தீபாவளி கொண்டாடுவது வழக்கம். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வித ஆர்ப்பாட்டம் இல்லாமலும், எவ்வித பட்டாசு சத்தம் கேட்காமல் சத்தமில்லா தீபாவளியை திருப்பத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
திருப்பத்தூர்-மதுரை செல்லும் சாலையில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இந்த சரணலாயமானது அருகே உள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து கூடு கட்டி குஞ்சுகளை பொரித்து இனத்தை பெருக்கி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் இவ்வாறு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். இதையடுத்து இந்த மாதங்களில் தீபாவளி பண்டிகை வருவதால் அன்றை தினத்தன்று இந்த கிராம மக்கள் வீடுகளில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் மற்றும் இரவு நேரத்தில் அதிக ஒளியை தரும் வகையில் வெடிக்கும் பட்டாசுகளை பல ஆண்டுகாளாக புறக்கணித்து சத்தமில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பறவைகள் தங்கியிருந்து இனப்பெருக்கம் முடிந்து செல்லும் வகையில் இந்த கிராமத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் இந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தேடி வந்த பறவைகளின் சுதந்திரத்திற்காக சத்தமில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து இக்கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் மழைக்காலம் தொடங்கிய பின்னர் கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கி விடும். இவ்வாறு கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கண்மாயில் உள்ள மரங்களில் கூடு கட்டி தங்களது இனப்பெருக்கத்தை தொடங்கும். இவ்வாறு ஆண்டுதோறும் பறவைகள் வரத்தொடங்கினாலே அந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது எங்களது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியதால் நடப்பாண்டில் பறவைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வந்துள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தின் போது பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து மிகழ்சியாக கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை கொண்டாடி வருகிறோம். பட்டாசு வெடிக்க தொடங்கினால் ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தை நோக்கி வரும் இந்த பறவைகள் அதன் பின்னர் இங்கு வருவதை நிறுத்தி விடும். எனவே எங்களது சந்தோஷத்தை விட பறவைகள் வருகையே எங்களுக்கு முக்கியமாகும். இதை பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்து வளர்த்து வருகிறோம். அவர்களும் அதன் முக்கியத்தை உணர்ந்து பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். எங்களது இந்த தியாக உணர்வை ஆண்டுதோறும் பாராட்டி வனத்துறை சார்பில் இனிப்புகள் வழங்கி எங்கள் கிராம மக்களை பாராட்டி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.