காளசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவரை அதிகாரிகள் மிரட்டுவதாக கலெக்டரிடம் எம்.எல்.ஏ. புகார் - வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

ஊராட்சி மன்ற தலைவரை அதிகாரிகள் மிரட்டுவதாக கலெக்டரிடம் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரில் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-01 10:45 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஊராட்சி ஒன்றிய கிராமமாகும். இந்த ஊராட்சியில் இருளர் இனத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படவேடு செண்பகத்தோப்பு அணையை ஆய்வு செய்ய வந்த மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், காளசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாளை அதிகாரிகள் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்று போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஊராட்சி துணைத்தலைவர் மணிமேகலை அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள் கூறுகையில், ‘தன்னை அதிகாரிகள் யாரும் மிரட்டவில்லை. எங்கள் ஊருக்கு சில அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் கண்டுகொள்ளவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள சாமந்திபுரம் பகுதியில் இருந்து, நாங்கள் வசிக்கும் இருளர் இன குடும்பங்களுக்கு குடிநீர் வசதிக்காக பைப்லைன் விஸ்தரிப்பு பணி செய்ய சென்றோம். அப்போது அப்பகுதி வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் தடுத்துவிட்டனர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை’ என்றார்.

அதைத் தொடர்ந்து போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இனிவரும் காலங்களில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாளுக்கு, துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவோம் என உத்தரவாதம் அளித்துள்ளனர். மேலும் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு அரசு மூலம் கிடைக்கப் பெறாததால் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி தலைவர்கள் திண்டாடுகின்றனர். விரைவில் போதிய நிதி கிடைக்கப் பெற்றதும் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்’ என்றார்.

இந்த சம்பவம் காளசமுத்திரம் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்