தொப்பூர் கணவாயில் மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது - டிரைவர், கிளீனர் காயம்

தொப்பூர் கணவாயில் மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.

Update: 2020-11-01 09:45 GMT
நல்லம்பள்ளி,

கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த சிவா (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த மஞ்சுநாத் (25) கிளீனராக உடன் வந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். லாரி கவிழ்ந்ததால் தர்மபுரி-சேலம் மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து டிரைவர் மற்றும் கிளீனரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இந்த விபத்து காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தொப்பூர் கணவாயில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 விபத்துகள் நடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க சாலையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்