பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்ததில் அழகுகலை நிபுணர்களான 2 பெண்கள் பரிதாப சாவு - சேலத்தை சேர்ந்தவர்கள்
பரமத்திவேலூர் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்ததில் சேலத்தை சேர்ந்த அழகுகலை நிபுணர்களான 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
பரமத்திவேலூர்,
சேலம் அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி மோகனா (வயது 35). சேலம் ராஜாராம் நகர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜூ மனைவி தேவயாணி (25). சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ரித்திகா (16). அழகு கலை நிபுணர்களான இவர்கள் 3 பேரும் தேவயானியின் காரில் சிவகாசியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகள் அலங்காரத்திற்கு சென்றனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு சிவகாசியில் இருந்து சேலம் செல்வதற்கு புறப்பட்ட அவர்கள் நேற்று அதிகாலை கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தேவயானி காரை ஓட்ட முன்பக்கத்தில் ரித்திகாவும், பின்பக்கத்தில் மோகனாவும் அமர்ந்து வந்தனர். கார் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கீரம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது நிலைதடுமாறி சாலையின் இடதுபுறம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி மோகனா மற்றும் தேவயானி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகனா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தேவயானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவயாணி நேற்று மதியம் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரித்திகா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் பலியான தேவயாணி கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக காரை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் அழகுகலை ஊழியர்கள் 2 பேர் பலியான சம்பவம் சேலம் அம்மாபேட்டை, ராஜாராம் நகர் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.