தொட்டியம் அருகே பரபரப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

தொட்டியம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து கல்லூரி மாணவி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-11-01 00:56 GMT
தொட்டியம், 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஆணைக்கல்பட்டியில் பழனிவேல் என்பவர் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் தகரக் கொட்டகை ஒன்று உள்ளது. அந்த கொட்டகை எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் நேற்று காலை அந்த கொட்டகை பூட்டிக்கிடந்தது.

இதை தோட்டத்திற்கு சென்ற பழனிவேல் மற்றும் அப்பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர்கள் பார்த்தனர். இதனால் அவர்கள் சந்தேகம் அடைந்து ஜன்னலை திறந்து உள்ளே பார்த்தபோது, ஒரு வாலிபரும், பெண்ணும் அருகருகே தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கல்லூரி மாணவி

இதுபற்றி தகவல் அறிந்த காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி, காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூக்கில் தொங்கிய வாலிபர், காடுவெட்டி மேலவளிக்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமியின் மகன் நவீன்குமார் (வயது 23) என்பதும், உடன் தொங்கியது, அவரது காதலியான நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரூர் ஆலம்பட்டியை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணைக்கு பயந்து...

மேலும் நவீன்குமார் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றபோது, அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 29-ந்தேதி இரவு மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அந்த மாணவியை நவீன்குமார் கடத்திச்சென்றதாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதையறிந்த இருவரும் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை ஆணைக்கல்பட்டி தோட்டத்தில் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவருடைய உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடலை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கும், நவீன்குமாரின் உடலை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கல்லூரி மாணவி தனது காதலனுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்