3-வது நாளாக வருமானவரி சோதனை: பையா கவுண்டருக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனை முன் தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

3-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்றதால் பையா கவுண்டருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன் தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-31 06:15 GMT
சரவணம்பட்டி,

கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் வீட்டிற்கு கடந்த 28-ந் தேதி பெண் அதிகாரி உள்பட 8-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். இதையடுத்து பையா கவுண்டர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நேற்று 3-வது நாளாக பையாகவுண்டர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று கோவை மேற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

உடனே அவர் கோவை காளப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு 3 நாட்களாக அன்னூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்