ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தம்

ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-10-31 04:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு கோத்தகிரி, குன்னூர், கூடலூரில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கின்றன. சீசன் காலங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஊட்டியில் நாளுக்கு நாள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மற்றொரு புறம் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டது.

அதன்படி ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சந்திப்பு பகுதியில் வாகனங்களை கண்காணிக்க 4 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இரும்பு கம்பி நடவு செய்யப்பட்டு இருக்கிறது.

தானியங்கி எந்திரம் மூலம் தொழிலாளர்கள் ஒரு இடத்தில் தலா 2 கேமராக்களை பொருத்தி உள்ளனர். பின்னர் இதன் இணைப்பு ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளது. நீலகிரியில் முதல்கட்டமாக ஊட்டியில் சோதனை அடிப்படையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒரே இடத்தில் பொருத்தப்படும் 2 கேமராக்களில் ஒன்று விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன பதிவு எண்ணை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும். மற்றொன்று சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்களின் வீடியோவை பதிவு செய்யும். அதாவது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, 3 பேர் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பது போன்ற விதிமீறல்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகள்