விழுப்புரத்தை சேர்ந்தவரிடம் டிராக்டர் வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது

விழுப்புரத்தை சேர்ந்தவரிடம் டிராக்டர் வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-10-30 22:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். அப்போது சென்னை முகப்பேர் சத்யா நகரில் பழைய கார்கள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வரும் சென்னை பாடி டி.எம்.பி. நகர் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (31) என்பவருடன் பிரபுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் நிஷாந்த், பிரபுவிடம் ஏன் கூலிக்காக டிராக்டர் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டதோடு நான் 4 சக்கர வாகனங்களை பல இடங்களில் உள்ள யார்டுகளில் குறைந்த விலைக்கு பல பேருக்கு வாங்கிக்கொடுத்துள்ளதாகவும், அதுபோல் உங்களுக்கும் சொந்தமாக டிராக்டர் ஒன்றை வாங்கித்தருகிறேன் என்று கூறிய அவர், பிரபுவிடம் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் டிராக்டர் உள்ளதாகவும், அதனை வாங்க ரூ.6 லட்சம் செலவாகும் என்றார்.

இதை நம்பிய பிரபு, கடந்த 22.7.2020 அன்று தனது மாமா பரந்தாமன் முன்னிலையில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்தை நிஷாந்திடம் கொடுத்தார். பின்னர் மீதியுள்ள ரூ.4 லட்சத்து ஒரு ஆயிரத்தை நிஷாந்தின் நிறுவன பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பிரபு அனுப்பியுள்ளார். ஆக மொத்தம் ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்ட நிஷாந்த், பிரபுவிற்கு டிராக்டர் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். பலமுறை அவரிடம் சென்று வற்புறுத்தி கேட்டும் டிராக்டரை வாங்கிக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் பிரபுவும், பரந்தாமனும், சென்னை பாடியில் உள்ள நிஷாந்தின் வீட்டிற்கு சென்று டிராக்டர் வாங்கித்தரும்படியும், இல்லையெனில் ரூ.6 லட்சத்தை திருப்பித்தரும்படியும் கேட்டனர். அதற்கு நிஷாந்தும், அவரது மனைவி காயத்திரியும் (30) சேர்ந்து பிரபு, பரந்தாமன் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த பிரபு, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தையும், காயத்திரியையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னைக்கு விரைந்து சென்ற போலீசார், நிஷாந்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்