பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை - புதிய கலெக்டர் கார்த்திகா பேட்டி
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள், புகார்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கலெக்டர் எஸ்.பி.கார்த்திகா கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.பி.கார்த்திகா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு திட்ட பயன்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
எண்ணேகொல்புதூர் நீர்ப்பாசன திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிமராமத்து திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அங்கு ஜவுளி பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் ஜவுளி பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 11 இடங்களில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏழை, எளிய தகுதியுள்ள பயனாளிகளுக்கு இந்த குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள், புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் தர்மபுரி மாவட்டம் முன்னோடி மாவட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அதிக குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு ரூ.450 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி-2 உடன், நீர் பாசனத்துக்கான ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை சேர்த்து நிறைவேற்ற அரசின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். முன்னதாக அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், உதவி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.