திருவேங்கடம் அருகே, திருமண விழாவில் கோஷ்டி மோதல்; 10 பேர் காயம்
திருவேங்கடம் அருகே, திருமண விழாவில் கோஷ்டி மோதல்; 10 பேர் காயம்
திருவேங்கடம்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியிலிருந்து பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் நடந்த ஒரு திருமண விழாவிற்காக ஏராளமானோர் சென்றிருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர், கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. அங்கு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வாலிபர்கள் சிலர், மது போதையில் விசிலடித்து ஆடிப்பாடியுள்ளனர். இதை, மற்றொரு கும்பல் தட்டிக் கேட்ட போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில், கோமதியாபுரம் 1-ம் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 23), மதன் (23) ஆகியோர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.