மழைநீர் தேங்காமல் இருக்க பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாற்று ஏற்பாடு பணிகள் தீவிரம் - பருவமழையையொட்டி நடவடிக்கை

பருவமழையையொட்டி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க மாற்று ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2020-10-31 00:10 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28-ந்தேதி தொடங்கியது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை முதல்நாளே அதிரடியை காட்டியது. அன்றைய தினம் நள்ளிரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை கனமழை பெய்தது. கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மழை நீரால் சூழப்பட்டன. இதில் குறிப்பாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் ஏரி போல நிறைந்தது. மழைநீரில் தத்தளித்த வாகனங்கள் பல பழுதாகி நின்றன. வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், சில மணி நேரங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழையையொட்டி இனி அடிக்கடி மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம் என்பதால், மீண்டும் ஒரு போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடாது என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, மழைநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மாற்று நடவடிக்கைகள் கையாளப்பட்டது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜோதி வெங்கடாசலம் சாலை சந்திப்பு பகுதியில் தான் (போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே) தண்ணீர் அதிகளவு தேங்கும் என்பதால், அங்கு ராட்சத பள்ளம் வெட்டப்பட்டது. இந்த பள்ளம் சாலையின் மறுபுறம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருக்கும் மழைநீர் வடிகால் வாய் இணைப்பு சீரமைக்கப்பட்டு, அருகிலேயே ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த குழாய்கள் சாலையின் மறுபுறம் வரையிலும் சுரங்கம் வழி போல நீட்டிக்கப்பட்டது.

இந்த ராட்சத குழாய்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளன. இதனால் இனி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அது உடனடியாக குழாய்கள் வழியாக பாதாள சாக்கடைக்குள் சென்று சேர்ந்துவிடும். அதேபோல வடிகால்வாய்களும் சீரமைக்கப்பட்டன.

இந்த பணிகளினால் போக்குவரத்து பாதிக்காதவாறு அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். முன்னதாக சாலையில் குழாய்கள் பதிக்கப்படும்போது, பள்ளத்தின்மீது ராட்சத இரும்பு தகடுகள் பதிக்கப்பட்டன. இந்த இரும்பு தகடுகள் பள்ளத்தை மறைத்து கொண்டதால் வாகனங்கள் சிக்கலின்றி சாலையில் செல்லமுடிந்தது. இந்த பணிகள் அனைத்தும் பெருமளவு நேற்றே நிறைவடைந்தது. இன்று அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இன்னும் பல இடங்களில் இதேபோல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாற்று நடவடிக்கை மூலம் இனி சாலையில் மழைநீர் தேங்காது என்று எதிர்பார்க்கலாம் என்பதால் மக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்