விலை உயர்வு எதிரொலி: பெரிய வெங்காயம் பதுக்கலா? கடைகளில் அதிகாரிகள் சோதனை
பெரிய வெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக அவை பதுக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோத்தகிரி,
பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள காய்கறி மண்டிகள் மற்றும் கடைகளில் பெரிய வெங்காயத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய அதிகாரிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் கோத்தகிரி காந்தி மைதானம், திறந்தவெளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி மண்டிகள், காய்கறி கடைகளில் வெங்காயம் பதுக்கப்பட்டு உள்ளதா என்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெரிய வெங்காயம் கொள்முதல் செய்ததற்கான ரசீதுகளை பார்வையிட்ட அதிகாரிகள், அனைத்து கடைகளிலும் விலை குறித்த பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு தெரியுமாறு கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டனர்.