குடிநீர்கேட்டு கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை

சிங்கம்புணரியில் குடிநீர் கேட்டு தாலுகா அலுவலகத்தில் காலிகுடங்களுடன் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-10-30 12:15 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மப்பட்டி ஊராட்சியை சேர்ந்த காரியாம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் 260 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பொது மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தேவைக்கு தினந்தோறும் 3 நாளுக்கு ஒருமுறை நள்ளிரவு நேரங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பெண்கள் நள்ளிரவில் குடங்களுடன் அலையும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். மேலும் ரேஷன் கடை அமைத்து தர கோரியும், ரேஷன் அட்டைகள் மற்றும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் தர்மப்பட்டி ஊராட்சியில் இருந்து காரியாபட்டிக்கு வாங்கி வர சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று வர வேண்டிய நிலையில் வயதானவர்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை கொண்டுவர மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே எங்கள் கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை எங்கள் கிராமத்திலேயே வழங்க ஒரு துணை விற்பனை அங்காடி மையம் அமைத்து தரகோரிக்கை வைத்தனர்.இந்தநிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணை தாசில்தார் சாந்தியிடம் குடிநீர் மற்றும் ரேஷன் கடை அமைத்து தர வலியுறுத்தினர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துணை தாசில்தார் சாந்தி தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்