இந்தியாவில், 1 லட்சம் பேரில் 689 பேர் பக்கவாத நோயால் பாதிப்பு தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் தகவல்

இந்தியாவில், 1 லட்சம் பேரில் 689 பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் டாக்டர் கூறினார்.

Update: 2020-10-30 04:17 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி மூளை நரம்பியல் துறை சார்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருதுதுரை தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் மூளை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலகில் பக்கவாத தினம் அக்டோபர் 29-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதிக உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மது அருந்துதல், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இதய நோய் போன்றவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது. கவன சிதறல், கடுமையான தலைவலி, பார்வை குறைபாடு, முகம், கை, காலில் உணர்ச்சியின்மை அல்லது செயலிழப்பு, பேச்சு குளறுதல், நடப்பதில் சிரமம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

689 பேர் பாதிப்பு

இந்தியாவில் 1 லட்சம் பேரில் கிராமப்புறங்களில் 265 பேரும், நகர்ப்புறத்தில் 424 பேரும் என மொத்தம் 689 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட 370 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பக்கவாத நோய் ஏற்பட்டு 4½ மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஊனத்தின் தன்மை குறையும். இந்த நோயினால் ஏழை, நடுத்தர மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஆஞ்சியோ கிராம் போன்ற பரிசோதனைகள் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு, கசிவு, வெடிப்பு இருப்பதை கண்டறியலாம். திடீரென பக்கவாதம் ஏற்பட்டால் ஆடையின் இறுக்கத்தை தளர்த்தி சீரான காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு வாய் வழியாக தண்ணீரோ, உணவோ கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், அரவிந்தன், மருத்துவ கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மூளை நரம்பியல் நிபுணர் லெனின் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்