மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் ஞானபுரீஸ்வரர்-தர்மபுரீஸ்வரர் கோவில்களில் குடமுழுக்கு
மயிலாடுதுறை தர்மபுர ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் மற்றும் தர்மபுரீஸ்வரர் கோவில்களில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் 47-வது குருமகா சன்னிதானம் கலந்துகொண்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை ஞானபுரீஸ்வரர் மற்றும் அபயாம்பிகை உடனாகிய தருமபுரீஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன. உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் திருப்பணி வேலைகள் நடந்தது.
இந்நிலையில் திருப்பணி வேலைகள் முடிவு பெற்ற நிலையில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி, முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
புனித நீர்
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி காலை 9 மணிக்கு பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலை 9.40 மணிக்கு ஞானபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும், 10.20 மணிக்கு தருமபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடந்தது.
இதில் கோவில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதில் திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான்சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.