பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் பலி
பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக் கொண்டதில் என்ஜினீயர் பலியானார்.
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே உள்ள புதுவளவு பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ்(வயது 24). கட்டிட என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பூலாங்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேகுப்பட்டி ஏனமேடு அருகே சென்றபோது பூலாங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், அருண்ராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இதில், அருண்ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோபாலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் அருண்ராஜை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சாவு
அங்கு அனுமதிக்கப்பட்ட அருண்ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.