காவலர் உடல் தகுதி தேர்வு முறை மாற்றத்தில் அரசு மீது சந்தேகம் - பாரதீய ஜனதா அறிக்கை

காவலர் உடல் தகுதி தேர்வு முறையை அரசு மாற்றி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

Update: 2020-10-29 21:45 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் காலியாக உள்ள 390 காவலர், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டு காவலர் தேர்வு நடத்தாமல் காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டியது. இதுகுறித்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்து வலியுறுத்தியதையடுத்து தற்போது வருகிற 4-ந்தேதி உடல் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு மின்னணு சாதன பட்டை இல்லாமல் விசில் முறையில் நடத்தப்படும் என அரசு அறிவித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு நடத்தப்படும் உடல் தகுதி தேர்வானது ஆளும் காங்கிரஸ் அரசு பரிந்துரைக்கும் நபர்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பாக அமையும். 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த காவலர் தேர்விற்காக பயிற்சி பெற்று வரும் தகுதி உள்ளவர்களுக்கான வாய்ப்புகளை இந்த அரசு தட்டிப்பறிக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்த பணியிடங்களுக்கான உடல்தகுதி தேர்வுகளை நடத்திக் கொடுக்க தனியார் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் என்னவானது? மின்னணுபட்டை மூலம் நடைபெற வேண்டிய உடல்தகுதி தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது ஏன்? இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடினால் உடல்தகுதி தேர்வுகள் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் இளைஞர் களின் எதிர்காலம்தான் பாழாகும்.

தற்போது நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியினர் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் வேலைவாங்கி தருவதாககூறி பணம் வசூல் செய்யும் திரைமறைவு வேலைகளும் நடந்து வருகிறது. கவர்னர், தலைமை செயலாளர் இவ்விஷயத்தில் தலையிட்டு தனியார் மென்பொருள் நிறுவனம் மூலம் காவலர் தகுதி தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்