கொரோனாவுக்கு மத்தியிலும் கடுமையாக உழைக்கும் ‘சரத்பவாருக்கு தலை வணங்குகிறேன்’ பங்கஜா முண்டே பாராட்டால் பரபரப்பு

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடுமையாக உழைக்கும் சரத்பவாருக்கு தலை வணங்குவதாக பங்கஜா முண்டே பாராட்டியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-10-28 23:47 GMT
மும்பை,

தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபையில் அங்கம் வகித்த பங்கஜா முண்டே, மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் மகள் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். இவரை தேவேந்திர பட்னாவிஸ் கட்சியில் இருந்து ஓரம்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பங்கஜா முண்டேக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பங்கஜா முண்டே நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாருக்கு புகழாரம் சூட்டி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நெருக்கடி மற்றும் வேலை பளுவுக்கு மத்தியில் உங்களின் துரிதமான பணிக்காக ஆச்சரியப்படுகிறேன். தலை வணங்குகிறேன். எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், கடுமையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை எனது தந்தையிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

79 வயது சரத்பவாரின் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் நிலையிலும், சமீபத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்த நிலையிலும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான பங்கஜா முண்டே சரத்பவாரை பாராட்டி இருப்பது அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்