ஜோலார்பேட்டை அருகே, தோஷம் கழிப்பதற்காக கசாயம் குடித்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு - மந்திரவாதியிடம் விசாரணை
ஜோலார்பேட்டை அருகே தோஷம் கழிப்பதாக மாந்திரீகம் செய்து கொடுத்த கசாயத்தை குடித்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மந்திரவாதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சி சாலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சி. இவருடைய மனைவி அன்னபூரணி (வயது35). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் கேத்தாண்டப்பட்டி பகுதியை சார்ந்த ஆண் ஒருவர் கடந்த 10-ந் தேதி அன்னபூரணி வீட்டுக்கு சென்று வேப்பிலையால் மந்திரம் போட்டுள்ளார். அதன் பிறகு உனக்கு தோஷம் உள்ளது. இதற்கு சில மாந்திரீகம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி மாந்திரீகம் செய்து மஞ்சள் கலந்த நீரை அன்னபூரணி முகத்தில் தெளித்து, தான் அரைத்து வைத்திருந்த கசாயத்துடன் பால் கலந்து அவருடைய வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் அன்னபூரணிக்கு வயிறு எரிச்சல் ஏற்பட்டு, உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அன்னபூரணியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அன்னபூரணியின் தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், மாந்திரீகம் செய்த கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மீது புகார் அளித்தார். அன்னபூரணிக்கு மாந்திரீகம் செய்தவர் எந்த கசாயத்தை கொடுத்தார் என்பது தெரிந்தால் அதனடிப்படையில் மருத்துவம் அளிக்கலாம் என டாக்டர்கள் கூறியதால் ஜோலார்பேட்டை போலீசார், மாந்திரீகம் செய்த நபரை நேற்று போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவர் கொடுத்த கசாயம், எந்த தழைகளை வைத்து தயாரித்தார் என்பதை டாக்டர்கள் தெரிந்துகொள்ள அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.