விஜயதசமியையொட்டி கோவில், பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி
விஜயதசமியையொட்டி கோவில், பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி நேற்று நடந்தது.
நெல்லை,
நவராத்திரி நாட்களில் ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி ஆகும். இந்த நாளில் வித்தைகளை கற்றுக்கொள்வதை தொடங்குவதும், எந்த ஒரு தொழிலை தொடங்குவதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இதையொட்டி நெல்லை டவுன் கீழரதவீதியில் உள்ள சரசுவதி கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துவந்தனர். அங்கு தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அரிசியில் குழந்தைகளின் கையை பிடித்து எழுத்து பயிற்சி அளித்தனர்.
மாணவர் சேர்க்கை
இதே போல் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நேற்று மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. பாளையங்கோட்டை பள்ளியில் குழந்தைகளை குடைபிடித்து அழைத்துச்சென்றனர். அங்கு வரிசையாக குழந்தைகளை பெற்றோருடன் அமர வைத்து, கடவுள் வழிபாடும் அதைத்தொடர்ந்து எழுத்து பயிற்சியையும் தொடங்கி வைத்தனர். குழந்தைகளுக்கு கையைப்பிடித்து அரிசியில் கடவுள் குறியீடு, தமிழ், ஆங்கிலத்தில் முதல் எழுத்துகள், 1-வது எண் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தனர்.