சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி, வெம்பக்கோட்டை தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்து ஆபத்தான முறையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுக்க வெம்பக்கோட்டை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தீபாவளி நெருங்கி வருவதால் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக எந்த வித பாதுகாப்பு விதிமுறைகளையும் மேற்கொள்ளாமல் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் அபாயம் உள்ளது.
சோதனை
போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்தும், செயல்படாத பட்டாசு ஆலைக்கு பின்புறம் தகர செட் அமைத்தும் சோல்சா வெடிகள், பேன்சி ரக வெடிகள் உள்ளிட்ட பட்டாசு வகைகள் தொடர்ந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலைக்கு பின்புறம் கூடாரம் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
5 பேர் கைது
அப்போது மாரனேரியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 29), சிவகாசியை சேர்ந்த முத்துசாமி (48), கொங்காலாபுரத்தை சேர்ந்த சுடலை (32) ஆகியோர் கூடாரம் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்து 7 பெட்டிகளில் 100 கிலோ பேன்சிரக வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சிவகாசி கிழக்கு போலீசார் ஆய்வில் ஈடுபட்டபோது நாரணாபுரம் ஆர்.சி.எஸ். காலனியில் உள்ள முனியசாமி கோவில் அருகில் புதுத்தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 32) சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
மாரனேரி போலீசார் போடுரெட்டியபட்டி பகுதியில் சோதனை செய்த போது அங்கு சித்துராஜபுரத்தை சேர்ந்த சோம்நாத்பாபு (35) என்பவர் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.