தீபாவளி பண்டிகையையொட்டி செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணி மும்முரம்

தீபாவளி பண்டிகையையொட்டி செட்டிநாடு பகுதியில் கைத்தறி மூலம் கண்டாங்கி சேலைகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

Update: 2020-10-27 01:36 GMT
காரைக்குடி, 

கண்டாங்கி சேலைகளுக்கு என்று தனி மவுசு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தற்போது செட்டிநாடு பகுதியில் கண்டாங்கி சேலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது முதலில் புத்தாடை தான். ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் புத்தாடை எடுத்து அன்றைய நாளில் அணிந்து தீபாவளி கொண்டாடுவது அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி வர உள்ளது. இதையடுத்து தற்போது செட்டிநாடு பகுதியில் கைத்தறி மூலம் சேலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட சேலைகள் ஏற்றுமதி செய்யும் பணியும் மற்றொருபுறத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதகாலமாக கைத்தறி தொழில் முடங்கிய நிலையில் இருந்து வந்தது. மேலும் அந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தும் காணப்பட்டது.

தயாரிப்பு பணி

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கைத்தறி தொழில் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தற்போது இந்த சேலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி உற்பத்தியாளர் வெங்கட்ராமன் கூறும்போது, இத்தொழிலை நாங்கள் 3 தலைமுறையாக செய்து வருகிறோம். தற்போது ரெடிமேட் ஆடைகள் வரத்து அதிகரித்துள்ளதால் கைத்தறிக்கு இருந்த மவுசு குறைய தொடங்கியது. இதனால் செட்டிநாடு என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் இத்தொழிலை நம்பியிருந்தவர்கள் இதை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் ஒரு சில கைத்தறி நெசவாளர்கள் இத்தொழிலை தமது பாரம்பரிய தொழிலாக நினைத்து செய்து வருகின்றனர்.

ஏற்றுமதி

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு செட்டிநாடு கண்டாங்கி சேலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததால் இத்தொழில் மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைத்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைத்தறி பட்டு புடவைகளில் கோர்வை தாழம்பூ ரக பட்டு புடவை மற்றும் உடல் காட்டன் பட்டு ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டு புடவைகளின் எடை 350 கிராம் குறைவாக உள்ளதால் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு தயாரிக்கப்பட்ட கண்டாங்கி சேலைகள் டெல்லி, ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மிகவும் நலிவு பெற்ற இந்த தொழிலை மேலும் வலிமையுடையதாக மாற்ற அரசு சார்பில் கைத்தறி நெசவு கலைஞர்களுக்கும், இந்த தொழிலை நடத்தி வரும் உற்பத்தியாளர்களுக்கும் மானியம் உதவி செய்து தந்தால் மேலும் இத்தொழிலை விரிவுப்படுத்தலாம் என்றார். 

மேலும் செய்திகள்