சொத்து பிரச்சினையில் பயங்கரம்: கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை - சகோதரர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

பெங்களூருவில் சொத்து பிரச்சினையில் கார் டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. சகோதரர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2020-10-27 00:17 GMT
பெங்களூரு,

பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லட்சுமி நாராயணபுரா, 2-வது கிராசில் வசித்து வந்தவர் ரவி (வயது 36), கார் டிரைவர். இவரது சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ஆதிசங்கர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ரவி வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், சகோதரர் கார்த்திக் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. உடனே ஆத்திரமடைந்த ரவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது சகோதரர் கார்த்திக்கை குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்து அங்கிருந்து ரவியின் மற்றொரு சகோதரர் ஆதிசங்கர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், அண்ணன் ரவியிடம் இருந்த கத்தியை ஆதிசங்கர் பறித்ததாக தெரிகிறது. அதன்பிறகு, ரவியை கண்மூடித்தனமாக ஆதிசங்கர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக ரவி, அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு ரவி, கார்த்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்து விட்டார். படுகாயம் அடைந்த கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றியும் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சொத்து பிரச்சினை காரணமாக சகோதரர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதுபோல, நேற்று முன்தினம் மாலையில் அவர்களுக்கு உண்டான பிரச்சினையில் ரவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஆதிசங்கரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்