தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 11 பேர் கைது

திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். ஊருக்குள் வரவிடாமல் மிரட்டியதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2020-10-26 05:22 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மேட்டுபட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). திண்டுக்கல் நகர தி.மு.க. வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கடையை அடைத்துவிட்டு, மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது வேகமாக வந்த கார், அவருடைய மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அருண்குமாரை, காரில் இருந்து இறங்கிய கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிவிட்டது. இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி அருண்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

11 பேர் கைது

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அருண்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மேட்டுபட்டியை சேர்ந்த ஜார்ஜ் (32) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அருண்குமாரை கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜார்ஜ் அவருடைய அண்ணன் பிரான்சிஸ் (36), சின்னாளபட்டியை சேர்ந்த சபரிகாந்தன் (29), கார்த்திக் (27), பாலசந்தர் (20), திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த செல்வகுமார் (23), அந்தோணி (24), திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்த கருப்புசாமி (24), மேட்டுபட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் (26), ஸ்டாலின்ஜோசப் (36), மகேந்திரன் (22) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

இதையடுத்து கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் தனது உறவினரான மேட்டுபட்டியை சேர்ந்த சூசைஆரோக்கியராஜை கொலை செய்தார். சூசைஆரோக்கியராஜும், தற்போது கொலையான தி.மு.க. பிரமுகர் அருண்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதனால் நண்பரை கொலை செய்த ஜார்ஜ் மீது, அருண்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

எனவே, ஜார்ஜை ஊருக்குள் திரும்பி வரவிடாமல் மிரட்டி வந்துள்ளார். இதனால் ஜார்ஜ் வெளியூரில் பெயிண்டராக வேலை செய்தார். அப்போது சொந்த ஊருக்கு செல்ல முடியாத வேதனையை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அருண்குமார் உயிரோடு இருக்கும் வரை ஊருக்குள் செல்ல முடியாது என்பதால், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அருண்குமாரை நோட்டமிட்டு வந்தனர். இதையடுத்து சம்பவத்தன்று ஒரு கார் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்களில் வந்து அருண்குமாரை கொலை செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 11 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார், 3 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்