சீர்காழி அருகே தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்த தொழிலாளி கைது

சீர்காழி அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தன்னை பெற்ற தாயை கொன்று வீட்டின் முன்பு புதைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-25 02:46 GMT
சீர்காழி, 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருக்கருகாவூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி சாவித்திரி(வயது 75). முனியாண்டி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் வேலு(40). இவர், வெளியூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாவித்திரி திடீரென்று மாயமானார். அவரை காணாதது குறித்து அவரது உறவினர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

எலும்புக்கூட்டை இழுத்து சென்ற நாய்கள்

இந்த நிலையில் திருக்கருக்காவூர் கிராமத்தில் மழை நீர் செல்வதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கு பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது காணாமல் போனதாக கூறப்படும் சாவித்திரி வீட்டு முன்பும் பள்ளம் தோண்டி அந்த மண்ணை அருகில் உள்ள ஓரிடத்தில் குவியலாக கொட்டி வைத்தனர்.

இந்த நிலையில் கொட்டப்பட்ட மணல் குவியலில் புடவையால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த எலும்புக் கூட்டினை நாய்கள் கடித்து இழுத்து சென்றன. அதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அடையாளம் காட்டிய மகள்

தகவலின் அடிப்படையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் குவியலில் காணப்பட்ட எலும்புக்கூட்டை கைப்பற்றி அதே இடத்தில் அரசு டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து சாவித்திரியின் மகள் தையல்நாயகி என்பவர், அந்த எலும்புக்கூடு காணாமல் போன தனது தாய் தான் எனவும், காணாமல் போன அன்று தனது தாயார் எலும்புக்கூடு சுற்றப்பட்ட புடவை தான் அணிந்து இருந்ததாகவும் தெரிவித்தார்.

குடிக்க பணம் தராததால் கொலை

இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், சாவித்திரியின் மகன் வேலுவை பிடித்து விசாரணை செய்தனர். முதலில் மறுத்த வேலு பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் தனது தாயை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டதாகவும், அவர் பணம் தர மறுத்ததால் தான் அவரை அடித்துக்கொன்று வீட்டின் முன்பு பள்ளம் தோண்டி புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

கைது

இது தொடர்பாக போலீசார், வேலு மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகனே கொன்று வீட்டின் முன்பு புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்