அதிகாரிகள் வாகனங்கள் சேற்றில் சிக்கியதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வந்த அமைச்சர், கலெக்டர் 1,386 மனுக்கள் பெறப்பட்டது

பலாம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோனூர் கிராமத்தில் நடந்தது.

Update: 2020-10-23 14:22 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோனூர் கிராமத்தில் நடந்தது. அதில் பங்கேற்க அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர்.

நிகழ்ச்சி மதியம் ஒரு மணியளவில் முடிந்தது. இதையடுத்து மலைப்பகுதியில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த அமைச்சர், கலெக்டர் பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர். திடீர் மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியதால், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சகதியில் சிக்கி மலைமீது ஏற முடியாமல் நின்று விட்டன.

அதிகாரிகளின் வாகனங்களுக்கு பின்னால் வந்த அமைச்சர், கலெக்டரின் கார்கள் ஒரு மணி நேரத்துக்கும்மேல் நின்று விட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையறிந்த அமைச்சர், கலெக்டர் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சேறும் சகதியுமான சாலையில் நடந்து வந்தனர். அதிகாரிகள் நடந்து வந்ததைப் பார்த்த ஆவின் தலைவர் வேலழகன் மாற்று ஏற்பாடு செய்து, வேறொரு வாகனத்தில் அமைச்சர், கலெக்டரை அனுப்பி வைத்தார். பின்னர் சேற்றில் சிக்கிய வாகனங்கள் டிராக்டரில் கயிறு கட்டி இழுத்து மீட்கப்பட்டன.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் 1,434 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பழங்குடியினர் சாதி சான்றிதழ் தொடர்பாக 1,101 மனுக்கள், பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கக்கோரி 272 மனுக்கள், இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, சிட்டாவில் பெயர் திருத்தம் தொடர்பாக 4 மனுக்கள், வேலை வாய்ப்புக்கோரி ஒரு மனுவும், பசுமை வீடு, இலவச ஆடு வழங்க வேண்டும் என்பது உள்பட 1,386 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்