திருச்சியில் நள்ளிரவில் பூட்டை உடைத்து தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 19 பவுன் நகை, பணம் கொள்ளை
திருச்சியில் நள்ளிரவில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 19 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி,
திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51) . இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தனது மனைவி பிள்ளைகளுடன் ஒரு அறையில் படுத்து உறங்கினார்.
இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை மர்ம ஆசாமிகள் கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், இன்னொரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள் ளை அடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
பக்கத்து அறையில் படுத்து இருந்தாலும் அயர்ந்து தூங்கியதால் இந்த கொள்ளை சம்பவம் பற்றி பால சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு எதுவும் தெரியவில்லை. காலையில் கண் விழித்ததும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போனது கண்டு பாலசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அரசு மருத்துவமனை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் விரல்ரேகை, விரல் ரேகை நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீட்டில் ஆள் இருக்கும்போதே கொள்ளையர்கள் நடத்திய கைவரிசை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.