தொட்டியம் அருகே, கத்திக்குத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு - ஐகோர்ட்டு மதுரை கிளையில் வாலிபர் சரண்

தொட்டியம் அருகே கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த வாலிபர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-10-20 22:15 GMT
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கருப்பணாம்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். அவருடைய மகன் முரளி (வயது 32). விவசாய கூலி தொழிலாளி. ராஜகோபாலின் தம்பி தங்கராசு(50), இவரது மகன்கள் சதீஷ்(24), பூபதி (17).

கடந்த 14-ந்தேதி பூபதி அங்குள்ள ஒரு மைதானத்துக்கு கபடி விளையாட சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் பிரபு(23) பூபதியை வழிமறித்து திட்டியுள்ளார்.

இதனால், வீட்டுக்கு சென்ற பூபதி, இதுபற்றி தனது தந்தை, அண்ணன் மற்றும் பெரியப்பா மகன் முரளி ஆகியோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் 3 பேரும் பிரபுவிடம் சென்று பூபதியை திட்டியது குறித்து தட்டிக்கேட்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டவே, தங்கராசு, சதீஷ், முரளி ஆகிய 3 பேரையும் பிரபு கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரபுவை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், முரளி நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 2 பேரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் போலீசார், முரளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, தப்பி ஓடிய பிரபுவை தேடி வந்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த பிரபு நேற்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் சரண் அடைந்தார்.

மேலும் செய்திகள்