பணம் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் வழங்காத குடிநீர் இணைப்பிற்கு கட்டணம் செலுத்த நகராட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வரும் ரசீது - ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி

பணம் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் இணைப்பு வழங்காத நிலையில், குடிநீருக்கான கட்டணம் செலுத்தக்கோரி 6 மாதங்களுக்கு ஒரு முறை நகராட்சி அலுவலகத்தில் இருந்து வரும் ரசீதால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Update: 2020-10-20 22:15 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலமடவளாகம் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் ஜெயராமன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். மேலும் நகராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் உள்பட ரூ.9,114 செலுத்தி உள்ளார். இருந்தபோதிலும் இவருக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக ரங்கராஜன் ஜெயராமன், கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டபோதிலும் அதற்கு சரியான பதிலை நகராட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று ரங்கராஜன் ஜெயராமன் தெரிவித்தார்.

குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தற்போது வரையில் இவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை குடிநீர் கட்டணம் செலுத்துமாறு கூறி ரங்கராஜன் ஜெயராமனுக்கு குடிநீர் கட்டண ரசீது அனுப்பப்பட்டு வருகிறது. வழங்காத குடிநீர் இணைப்பிற்கு குடிநீர் கட்டணம் கேட்டு வரும் ரசீதால் ஆட்டோ டிரைவர் ரங்கராஜன் ஜெயராமன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனவே வழங்காத குடிநீர் இணைப்பிற்கு கட்டணம் கேட்டு வந்த ரசீது தொடர்பாக மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்