வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை விளார் சாலை ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பூவராகன். இவருடைய மகன் நவீன்குமார்(வயது 27). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யஹர்சினி. இவரது பெயரில் விளார் சாலை பத்மநாபன் நகரில் 2,400 சதுர அடி பரப்பில் வீட்டு மனையை நவீன்குமார் வாங்கினார்.
இந்த மனை வரைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற உரிய படிவத்தை பூர்த்தி செய்து தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திவ்யஹர்சினி மனு அளித்தார். இதற்காக அவர், கூராய்வு கட்டணம் ரூ.500 உள்ளிட்ட அங்கீகாரத்திற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தி விட்டார்.
இந்த நிலையில் வீட்டுமனையின் அங்கீகார சான்று பெறுவதற்காக நேற்று முன்தினம் காலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நவீன்குமார் சென்றார். அங்கு அவர், பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் மகாதேவ்ராவை(56) நேரில் சந்தித்து சான்றிதழை எப்போது பெறலாம்? என கேட்டார்.
அதற்கு அவர், சான்று தயார் நிலையில் உள்ளது. சான்று வழங்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறினார். ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணம் எல்லாம் செலுத்திய நிலையில் லஞ்சம் கொடுக்க நவீன்குமாருக்கு விருப்பம் இல்லை. இதனால் அவர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியனை சந்தித்து அங்கீகார சான்று வழங்க அலுவலக உதவியாளர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தார்.
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், நான் தான் பணம் வாங்க கூறினேன். உதவியாளர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு சான்றை பெற்று செல்லுங்கள் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நவீன்குமார், தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை எனவும், நாளை(அதாவது நேற்று) கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நவீன்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். அதில், வீட்டுமனைக்கு அங்கீகார சான்று வழங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என அலுவலர்கள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கும்போது அலுவலர்களை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை நவீன்குமாரிடம் கொடுத்து, அந்த பணத்தை அலுவலர்களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட நவீன்குமார், நேற்று மதியம் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் அலுவலகத்திற்கு வெளியே நின்றனர்.
அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் இல்லாததால் உதவியாளர் மகாதேவ்ராவை சந்தித்து ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை நவீன்குமார் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், எண்ணிப்பார்த்துவிட்டு தனது பேண்ட் பையில் வைத்தார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, பத்மாவதி, வெங்கடேசன் மற்றும் போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
போலீசாரை பார்த்தவுடன் மாகதேவ்ராவ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதன் அடிப்படையில், தான் பணம் வாங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்த பாலசுப்பிரமணியன் அலுவலகத்திற்கு வந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது லஞ்சம் வாங்க சொன்னது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் இரவு 9.30 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவியாளர் மகாதேவ்ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.