எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - சூலூர் கொடியேற்று விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது என்று சூலூர் கொடியேற்று விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2020-10-19 03:40 GMT
சூலூர்,

சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், அ.தி.மு.கவின் 49-ம்ஆண்டு தொடக்க விழாவையொட்டி சூலூர் தொகுதிக்குட்பட்ட கோவை எல்.என்.டி பைபாஸ் ரோடு நீலாம்பூர் பகுதியில் 106 அடி உயர அ.தி.மு.க. கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி மேடையில் இருந்தவாறு ரிமோட் மூலம் கொடி ஏற்றினார். மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சூலூர் தொகுதி வி.பி. கந்தசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், சூலூர் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

எளிமையான நமது முதல்-அமைச்சர் மக்களை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ் எடப்பாடியார் தான் அடுத்த முதல்-அமைச்சர் எனக் கூறிய போதே, வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியார் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என உறுதியானது. ஆனால் எதற்கெடுத்தாலும் பொய் மற்றும் குற்றம் சொல்லி வரும் ஸ்டாலினை அவரது தொண்டர்களே அடுத்த முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடம் நேரடியாக சென்று ஓட்டு கேட்கும் தகுதி உடைய ஒரே கட்சி எதுவென்றால் அது அ.தி.மு.க மட்டும்தான். அதற்கான உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.

ஏனென்றால் இந்த ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்ட பணிகள் தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் மனதில் நிறைவாக உள்ள இந்த ஆட்சியானது நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த கடந்த 10 ஆண்டு வளர்ச்சியில் நாடு எவ்வளவு சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது என பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே மு.க.ஸ்டாலினுடைய முதல்-அமைச்சர் கனவு என்றென்றும் பலிக்காது. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் காலனி மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு காலனிக்கும், 50 மேஜை, நாற்காலிகள் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் வழங்கினார். மேலும், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் வறுமையில் இருப்போர் வாழ்வாதாரம் பெறும் வகையில் 49 பெட்டிக்கடைகள் வைப்பதற்கு ரூ.15 லட்சம் மதிப்பில் பெட்டிகள், மாற்றுத்திறனாளி பெண்கள் 2 பேருக்கு தலா 1 பெட்டி கடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான கொடியை அமைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவருமான வி.பி.கந்தவேல் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஏ.கே. செல்வராஜ், ஒ.கே. சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ. தாமோதரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி அசோகன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.குமரவேல், சூலூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் எம். அங்கமுத்து, சூலூர் ஒன்றிய துணை சேர்மன் எஸ்.சுரேந்திர மோகன், சூலூர் நகர செயலாளர் வக்கீல் கார்த்திகை வேலன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி நீலம்பூர் பி.ஆனந்தக் குமார், கண்ணம்பாளையம் நகர செயலாளர் கே.சிவகுமார், சாமளாபுரம் நகர செயலாளர் மணி, இருகூர் நகர செயலாளர் எம்.கே.எம்.ஆனந்தகுமார், சூலூர் வீட்டுவசதி சங்க தலைவர் ஏ.பி. அங்கண்ணன், மாவட்ட மீனவர் அணி தலைவர் எஸ்.ஆறுமுகம், கலங்கல் நடராஜ், ராஜ்குமார், சந்திரசேகர், பொன்னி சண்முகம், கணியூர் செல்வராஜ், சபாபதி, அரசூர் சிவசாமி, சாந்தாமணி மருதாசலம், சின்னியம்பாளையம் பெரியசாமி, சங்கோதி பாளையம் கனகராஜ், இருகூர் நகர அவைத்தலைவர் ஆர். பரமசிவம், மற்றும் இணைந்த கரங்கள் பிரபு, துரை சுப்பிரமணி, சரவணன், வார்டு உறுப்பினர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

மேலும் செய்திகள்