வடக்கு மண்டலத்தில் அதிரடி காட்டும் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்கள் மீது வீடு தேடிச்சென்று நடவடிக்கை எடுக்கும் போலீசார்

வடக்கு மண்டல போலீசார், புகார் கொடுக்கும் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் 3,912 புகார் மனுக்கள் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பெருமையுடன் சொல்கிறார்கள்.

Update: 2020-10-18 23:19 GMT
சென்னை,

வடக்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்கள் அடங்கும். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நாகராஜன் சமீப காலமாக அதிரடி காட்டத்தொடங்கி உள்ளார். இந்த அதிரடிக்கு காரணம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜேஷ்தாஸ் அண்மையில் பிறப்பித்த உத்தரவுதான்.

புகார் கொடுக்கும் பொதுமக்களை போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்க கூடாது. அதற்கு மாறாக புகார் கொடுத்த பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று போலீசார் விசாரணை நடத்த வேண்டும். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், யார் மீது புகார் கொடுக்கப்பட்டதோ அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால தாமதம் செய்யாமல் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும். கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ்தாசின் இந்த உத்தரவுதான், ஐ.ஜி.நாகராஜனின் அதிரடி நடவடிக்கையாகவும், புதிய அத்தியாயமாகவும், வடக்கு மண்டலத்தில் மலர தொடங்கி உள்ளது.

கடந்த 15 நாட்களாக வடக்கு மண்டல எல்லைக்குள் உள்ள 10 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இந்த புதிய உத்தரவை அமல்படுத்த தொடங்கி விட்டனர்.

கடந்த 15 நாட்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 7,800 புகார்கள் தொடர்பாக சுமார் 300 கிராமங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரித்து, உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் விளைவாக 3,912 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களை அலைக்கழிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மீதி உள்ள புகார் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறினார்கள். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்