அனுமதியின்றி வெட்டப்பட்ட சில்வர் ஓக் மரங்கள், லாரி பறிமுதல்
கோத்தகிரி அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உரிய அனுமதி இன்றி வெட்டப்பட்ட சில்வர் ஓக் மரங்கள், லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
தேயிலை விவசாயிகள் தங்களது தோட்டத்தில் ஊடு பயிராக பயிரிட்டு வரும் சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்கு எவ்வித அனுமதியும் பெற வேண்டியது இல்லை என்று இருந்த நிலையில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை வெட்டவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராமப் பகுதியில் தனியார் ஒருவரது தேயிலை தோட்டத்தில் வளர்ந்திருந்த சில்வர் ஓக் மரங்களை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து உரிய அனுமதி ஏதும் பெறாமல் வெட்டி லாரி மூலம் விற்பனைக்காக கொண்டு செல்வது வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில் நெடுகுளா வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திலகவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி, லாரியில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்லவிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் உடனடியாக வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். அதனை கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இது குறித்த அறிக்கை குன்னூர் உதவி கலெக்டருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.