அடியாட்கள் மூலம் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

அடியாட்கள் மூலம் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-10-15 04:22 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 36). நகைக்கடை தொழிலாளி. இவர் கடந்த 5-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்கொலைக்கு முன்பாக சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கோடிப்பள்ளியைச் சேர்ந்த கோபி (31) என்பவரிடம் சீட்டு கட்டி வந்ததாகவும், அந்த சீட்டை எடுத்து விட்டதாகவும், தற்போது வேலை இல்லாததால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை.

ஆனால் கோபி மற்றும் அவரது அடியாட்கள் என்னை தாக்கி பெற்றோரிடம் வீட்டை எழுதி வாங்கினார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். அந்த வீடியோவுடன், சுரேசை கோபியின் அடியாட்கள் தாக்கும் வீடியோவும் வாட்ஸ்அப் குழுக்களில் வந்தது. இதுதொடர்பாக கோபி அவரது அடியாட்கள் கமல், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நகை தொழிலாளி தற்கொலையின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடியாட்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தும் நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர், அடியாட்களை வைத்து ரூ.1 லட்சம், 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ஏலச்சீட்டுக்களை நடத்துகிறார்கள். சீட்டு பணம் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவிக்கிறார்கள்.

போலீசுடன் தங்களை நெருக்கமாக இருப்பதை போல காட்டிக் கொண்டு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏலச்சீட்டுக்களை அடியாட்களை வைத்து தொடர்ந்து நடத்துவதாகவும், இதில் அப்பாவி மக்கள் பலரும் பாதிக்கப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் யார்? அவர்களிடம் அடியாட்களாக யாரும் உள்ளார்களா? அவர்கள் இதேபோல பொதுமக்கள் யாரையும் மிரட்டி, தாக்கி உள்ளார்களா? என்ற விவரங்களை உளவு பிரிவு போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறுகையில், கந்து வட்டி கேட்டோ, சீட்டு பணம் தரவில்லை என்று ரவுடிகளை அனுப்பி மிரட்டினாலோ, தாக்கினாலோ எனது அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடியாட்களை வைத்து யாரேனும் ஏலச்சீட்டுகள் நடத்தி வந்தாலோ, அல்லது பொதுமக்களிடம் மிரட்டி பணம் கேட்டு வந்தாலோ என்னிடம் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்