கவர்னர் மாளிகையில் தவறுகள் நடக்கிறது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு

புதுவை கவர்னர் மாளிகையில் தவறுகள் நடப்பதாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2020-10-14 22:52 GMT
புதுச்சேரி,

நான் வகித்து வரும் சுற்றுலா, மீன்வளம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பிரச்சினைகள், எனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடிக்கு பலமுறை கடிதம் எழுதினேன். ஆனால் கவர்னர் கிரண்பெடியிடம் இருந்து எனக்கு பதில் வரவில்லை. இப்போது மீண்டும் 6 பக்க கடிதம் எழுதியுள்ளேன்.

கடந்த 2019-ம் ஆண்டு மீனவர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் அந்த நிதி சரண்டர் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்த கவர்னர் அடுத்த மாதமே அதை ரத்துசெய்துவிட்டார்.

பதப்படுத்தும் தொழிற்சாலை

மீனவர்கள் தொடர்பான எந்த திட்டத்துக்கும், மீனவர் நலக்கழகம் அமைக்கவும் கவர்னர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. உணவுப்பொருள் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கான கோப்பினை கவர்னர் நிராகரித்துவிட்டார். அதைவிடுத்து பால் மற்றும் தேன் தொடர்பான நிறுவனங்களை அமைக்க உத்தரவிட்டார்.

ஏனாமில் ஆற்றுமணல் எடுக்க 7 பேர் கொண்ட கமிட்டி உள்ளது. ஆனால் ஆற்றுமணல் அள்ள கவர்னர் சம்மதிக்கவில்லை. இதனால் அரசு கட்டிடங்கள் உள்பட தனியார் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

செலவினம் குறைப்பு

கொரோனா காரணமாக தனது செலவினத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக கவர்னர் கிரண்பெடி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் கடந்த காலங்களில் ரூ.3 கோடிவரைதான் கவர்னர் மாளிகைக்கு செலவிடப்பட்டது. ஆனால் இவர் வந்தபின் அந்த செலவினம் ஆண்டுக்கு ரூ.8 கோடி வரை உயர்ந்துள்ளது. தனது செலவினத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்ளட்டும்.

நான் கடந்த சில மாதங்களாக சம்பளம் வாங்கவில்லை. எனது கார் டீசல் செலவு, அலுவலக செலவு உள்ளிட்டவற்றை நானே ஏற்றுக்கொண்டுள்ளேன். அதனால் அரசுக்கு ஏற்படும் மிச்சத்தை வைத்தே மீனவர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையை வழங்கலாம்.

தனது அலுவலகத்துக்கு வரும் கோப்புகளை ஓரிரு நாளில் முடித்து அனுப்பிவிடுவதாக கவர்னர் கூறுகிறார். ஆனால் ஏனாம் வெங்கடேஸ்வரர் கோவில் நிலத்தை மாற்றுவது தொடர்பான கோப்பு ஒரு வருடம்வரை கவர்னர் மாளிகையில் கிடந்தது. தாகூர் கலாசார மையம் ஏனாமுக்கு தேவையில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 135 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக கோர்ட்டு உத்தரவுடன் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அதையும் அவர் செயல்படுத்தவில்லை.

தவறு நடக்கிறது

எனது முயற்சியால் புதுவையில் பிளாட்பாரங்கள் அழகுபடுத்துவது, சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் கவர்னர் கடந்த 4½ வருடத்தில் எதைக் கொண்டு வந்தார் என்பதை அவரால் சொல்ல முடியுமா? மாநில மக்களுக்கு எதையும் கிடைக்க விடாமல் தடுத்ததுதான் அவர் செய்தது?

கவர்னர் மாளிகையில் சிலர் மீது நான் புகார் கூறினேன். அதன் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? நான் சொன்னது உண்மையில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

துப்புரவு பணியில் 58 வயதுக்கு மேற்பட்டவர்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால் கவர்னருக்கு மிகவும் வேண்டப்பட்ட நிறுவனமான ஸ்வச்சத்தா கார்ப்பரேசனில் 75 சதவீதம் பேர் 58 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். அந்த நிறுவனத்துக்கு உரிய பில் அரசு மூலம் தரப்படாவிட்டால் கவர்னருக்கு தூக்கமே வராது. கவர்னர் மாளிகையில் தவறு நடக்கிறது. என்மீது தவறு இருந்தால் சி.பி.ஐ.யில் புகார் கொடுங்கள்.

வெள்ள நிவாரணம்

கடந்த 2 நாட்களாக ஏனாமில் கனமழை பெய்கிறது. அதிகாரிகள் எந்த நிவாரண பணியையும் மேற்கொள்ளாமல் தூங்குகிறார்கள். அவர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர். கவர்னர் மாளிகையில் இருந்து என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் செய்கிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் வந்த வெள்ளத்துக்கான நிவாரணம் கூட இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்