திருவண்ணாமலையில், விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலையில் உள்ள விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அக்கோவிலின் உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவிலின் வெளியில் ஒரு உண்டியல் உள்ளது. அதில் அலாரம் பொருத்தப்பட்டு இருந்ததால், அதனை முழுமையாக உடைக்காமல் பாதியில் விட்டு விட்டு மர்ம நபர்கள் கோவிலின் வாசல் இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளனர்.
அந்த உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.