கீழ்வேளூர் அருகே, மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் - பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகளை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது சாராயம் கடத்தி வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
சிக்கல்,
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டு வந்து சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள ஆனைமங்கலம் ஊராட்சி ஓர்குடி பகுதியில் அதிகமாக வெளி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை ஓர்குடி வெட்டாறு பாலத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக சாராய மூட்டைகளை கடத்தி வந்த 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சாராய கும்பலை மடக்கி பிடித்த பொதுமக்கள், அவர்களிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன் கடத்தி வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வெட்டாறு பாலத்தின் மீது அந்த பகுதி பெண்கள், சாராய பாக்கெட்டுகளுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சாராயம் கடத்தி வந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாராயம் கடத்தி வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் பாலித்தீன் பைகளில் கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் அங்கிருந்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திய நபர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை அருகே கடத்தி வரப்பட்ட சாராய மூட்டைகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.